Sunday, December 23, 2007

கன்னத்துக்குழி

உன் கன்னத்துக்குழியில் குடிசையிட்டு வாழ்கிறேன்
அதிகம் சிரிக்காதே அனுரா! பூகம்பம் நடக்கிறது.
"என் முகம் மறந்ததா சேகர்? எனக்கு குழிவிழுவதில்லை."
மறுக்காதே!நைல்தேசத்தழகே .
ஆய்வாளன் நான். அதிசய ப்ரமிட்டுகளின் அகமறிவேன்.
உன் புன்னகை அதிசயமே!
"வெள்ளைத்தோல் விரும்பி நீ, நான் தார் கருப்பு."
மறுக்கவில்லை நான், கருப்பு முத்து நீ.
உன் வெண்மையை திருடுகிறான் சூரியன்,
அதனால்தானோ அவன் என்னை சுடுவதில்லை?
"பொய், அத்தனையும் பொய்"
ஆச்சரியம் அனுரா, உயிருடன் நான்!
நீ பொய்யன் என்ற பின்பும். சாக நான் தயார்
உன் துப்பட்டா என் தூக்குக்கயிறானால்.
"அன்று இறைவனைப்பற்றி மட்டும் பாடப்போவதாய் சொன்னாயே?"
உன்னைக் கொண்டு எழுதும்போது ,காகிதம் ஈரமாகிறது.
அவனைக்கொண்டு படைத்தால் மையே ஆவியாகிறது.
"போதும் சேகர்! எனக்கு தூக்கம் வருகிறது."
சரி, ஆனால் இடப்பக்கம் படுக்காதே,
மூச்சு திணருகிறது அங்கே ஓர் இதயம்.
என் பெயர் சொல்ல முடியாமல்.
"உண்மைதான், என் துடிப்பு நீ, பின் ஏன் இந்தக்கவிதை?"
தெரியும், உன் மனத்திரையில் என் புகைப்படம் இருப்பது.
ஆனாலும் காலத்தால் தூசு படிகிறது,
அதைத் துடைக்கவே இந்தக்கவிதைப் பிரதிகள்.

Monday, October 22, 2007

மடம்

என்னைத் தொலைக்க சென்றால் -
செருப்பைத் தொலைக்காதே! என்று நுழைவாசல் எச்சரிக்கை,
காலம் கடக்கும் சிந்தனைச் சாரம் -
கடிகாரம் காட்டும் இடைவெளியில் மட்டுமே "விற்பனைக்கு".
துறவிகள் குடியிருப்பில் -
அனுமதியில்லை அறிவிப்பு, இருவர்ண நிலைப்பாடு.
பரமஹம்சர் சன்னதிக்குள் -
செல்போன் மௌனம், கம்பிக்கூண்டில் மூவர் கைது.
பெரியவரே, சிறைப்பட்டிருக்கிறது உங்கள் வெளிப்பாடெல்லாம், விடுவித்துக்கொள்ளும்.
என் சுதந்திரம்? விட்டுத்தள்ளும் அது என் பாடு.